search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி சபை கூட்டம்"

    சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் தாத்தா என்று அழைத்த குழந்தையிடம் மாமா என்று மு.க.ஸ்டாலின் அழைக்க சொன்னார். #DMK #MKStalin
    சாத்தூர்:

    தி.மு.க. சார்பில் ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்பதை முன் நிறுத்தி தமிழ்நாடு முழுக்க ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் நேற்று நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாடினார். இந்த வீடியோவை தி.மு.க. வின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தில் பல பெண்கள் கலந்துகொண்டு தங்களின் தேவைகளையும் குறைகளையும் ஸ்டாலினிடம் முறையிட்டனர்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு குழந்தையும் பேசியது. அந்த குழந்தை பேசும்போது, ‘ஸ்டாலின் தாத்தா வணக்கம்’ என கூறுகிறாள். உடனடியாக குறுக்கிடும் ஸ்டாலின் ‘ஸ்டாலின் தாத்தா இல்லை, ஸ்டாலின் மாமா’ என கூறுகிறார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து சிரிக்கின்றனர்.

    பிறகு உன் பெயர் என்ன என ஸ்டாலின் கேட்கிறார். அதற்கு குழந்தை மஹிதா, எல்.கே.ஜி எனக் கூற அந்த குழந்தைக்கு வாழ்த்து கூறுகிறார்.

    பிறகு அந்த குழந்தை “நான் உங்களுக்காக ஒரு பாட்டு பாடுகிறேன் எனச் சொல்லிவிட்டு, ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா...” என்ற பாடலை பாடி அசத்துகிறார். குழந்தையின் மழலை பேச்சும் ஸ்டாலின் பதிலும் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகிறது. #DMK #MKStalin
    தற்போது இருக்கும் ஆட்சியை நீக்கிவிட்டு தான் முதல்-அமைச்சரான பிறகு கிராம மக்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். #DMK #MKStalin
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செட்ரப்பட்டியில் தி.மு.க. சார்பில் இன்று காலை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று பெண்கள் உள்பட பலரிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது நான் இங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டேன். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் தான் நிறைவேற்றினோம்.

    தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஜப்பானில் இருந்து நிதிஉதவி பெற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சியமைத்தது. இருந்தபோதிலும் தர்மபுரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 40 சதவீதம்தான் தண்ணீர் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 50 சதவீதமும் தான் கொடுக்கப்பட்டது.

    தாங்கள் தான் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனை தீர்த்து வைத்ததாக அ.தி.மு.க.வினர்  கூறி வருகின்றனர்.

    ஆனால், இந்த செயல்முறைக்கு தீர்வு காண ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தான் செயலாற்றியது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கலைஞர், துணை முதல்-அமைச்சராக இருந்த நான் ஆகியோர் சேர்த்து ஜப்பான் நாட்டில் இருந்து நிதி உதவி பெற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தோம்

    இவ்வாறு அவர் பேசினார்.


    இதைத்தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் மு.க.ஸ்டாலினிடம் சில கோரிக்கைகளை விடுத்தனர்.

    அரூர் அருகே உள்ள செட்டிப்பட்டி சமத்துவபுரத்தில் மயானம் அமைத்து தரவேண்டும். விவசாயிகள் கடன்களை தீர்க்க வேண்டும். இந்த பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நிதி உதவி அளிக்க வகை செய்ய வேண்டும். மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும்.

    பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் காலை நேரத்தில் சீக்கிரமாக செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, செட்ரபட்டி பகுதியில் பஸ் போக்குவரத்து வசதி செய்ய வேண்டும். மொரப்பூரில் தனியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும், பி.எட். படித்து முடித்தவர்களுக்கும் தகுதியான ஆசிரியர் வேலை ஒதுக்கவில்லை. ஆகையால் நீங்கள் முதல்-அமைச்சராக வந்தபிறகு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பி.எட். முடித்தவர்களுக்கும் வேலை பெற வழிவகை செய்ய வேண்டும். செட்ரப்பட்டி பகுதியில் சுமார் 75 வீடுகள் உள்ளன. அரசு மூலம் அங்கன்வாடி பள்ளிகள் அமைத்து தரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    தற்போது இருக்கும் ஆட்சியை நீக்கிவிட்டு நான் முதல்-அமைச்சரான பிறகு நீங்கள் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #ADMK
    குடியாத்தத்தில் இன்று நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். #DMK #MKStalin
    வேலூர்:

    மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசி வருகிறார்.

    இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவூர் ஊராட்சியில் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் இன்று வேலூர் வருகிறார்.

    மாலை 3 மணிக்கு சீவூர் ஊராட்சி சபை கூட்டத்திலும், 4 மணிக்கு கூட்ரோட்டில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

    முன்னதாக வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த மாநகர அவைத்தலைவர் ரா.விஜயசங்கர் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். அதேபோன்று குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஜி.தனபால் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார். #DMK #MKStalin
    பாராளுமன்ற தேர்தலுக்காக கிராம சபை கூட்டத்தை நாடகம் போல் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக வைத்திலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். #Vaithilingam #MKStalin
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தர மக்களும் பொங்கல் பரிசு பெற்று பயன்பெற வேண்டும் என்பதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கம். அதன்படிதான் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்.

    மக்கள் எல்லோரும் பயன் பெற வேண்டிய திட்டத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதற்குப் பிறகு வழங்கப்படும்.

    கிராமசபை கூட்டம் ஜெயலலிதா காலத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அடிப்படைத் தேவைகளைக் கேட்டு அவற்றை பூர்த்தி செய்தார்கள்.

    இன்னும் மூன்று மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது ஒரு நாடகம் போல் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    தஞ்சை மாவட்டத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பயன்பெறுவதற்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அந்த வகையில் ஆய்வு செய்து தமிழக அரசு மக்களுக்கு சிறிதளவும் துன்பம் வராமல் செய்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நிதி நிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaithilingam #MKStalin
    ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தும் முறை மற்றும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு தலைமை கழகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற மகத்தான மக்கள் பயணம் கடந்த 9-ந்தேதி அன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினால் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

    இக்கூட்டங்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை மட்டுமல்ல, கழகத்தின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது. இது ஒரு பக்கம் பெருமையையும், இன்னொரு பக்கம் கழகத் தோழர்களாகிய நமக்கு பொறுப்பு கூடி வருகிறது என்பதையும் உணர வேண்டும்.

    இந்த நல்வாய்ப்பை கழக நிர்வாகிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தலைமைக் கழகத்தின் வேண்டுகோள்.

    கழகத் தோழர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் ஊராட்சிகளுக்கு செல்லும் போது முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது:-

    * ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அந்த ஊராட்சிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு மக்களை இல்லந்தோறும் சென்று அழைத்திட வேண்டும்.

    அச்சமயம், தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டறிக்கையை ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் வழங்கிட வேண்டும். கூட்டத்தில் பங்கெடுக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கூட இந்த துண்டறிக்கை போய் சேர வேண்டும்.

    * கழகத் தோழர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் அனைவரும் ஊராட்சி சபைக் கூட்டத்திற்கு செல்லும்போது, அனைத்து ஊராட்சிகளிலும் நிச்சயமாக இருவண்ணக் கொடியை புது கம்பத்தில் பட்டொளி வீசி பறக்க வைத்திட, மாவட்ட செயலாளர்களிடம் கலந்து பேசி ஏற்பாடு செய்திட வேண்டும். 12,617 ஊராட்சிகளிலும், இந்த கூட்டங்களை முடிக்கும் போது ஊராட்சி சபை கல்வெட்டுடன் அந்த கொடி கம்பங்கள் தமிழகம் முழுவதும் இருந்திட வேண்டும்.

    * கழகத் தோழர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் அனைவரும் ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு செல்லும் முன்பு ஊராட்சி செயலாளரின் இல்லம் சென்று, அந்த ஊராட்சிக்கு உட்பட்ட நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

    அச்சந்திப்பின் போது, அந்த ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பூத் கமிட்டிகளும் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அந்த பூத் படிவங்களை கையில் வைத்து கொண்டு சரிபார்க்க வேண்டும்.

    ஊராட்சி சபைக் கூட்டம் மூலம் மக்களைச் சந்திப்பது எவ்வாறு முக்கியமோ, அந்தளவுக்கு, பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி ஊக்கப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். அத்துடன், அந்த ஊராட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்திப்பது இன்னும் கூடுதல் பலன் தரும்.

    * இவ்வாறு நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தின் விவரங்களையும், புகைப்படங்களையும் வாரத்திற்கு ஒருமுறை, முறைப்படுத்தி தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK 
    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியம், இள்ளலூர் ஊராட்சி சபைக் கூட்டத்தில் முக ஸ்டாலின் இன்று மாலை கலந்து கொண்டு பொது மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அக்கிராம மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
    சென்னை:

    ‘மக்களிடம் செல்வோம் மக்களிடம் சொல்வோம் மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கங்களை முன் வைத்து மக்களிடம் சென்று இன்றைய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் மோசமான செயல்பாடுகளை மக்களிடம் சொல்வதன் மூலமாக பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டங்களை தொடங்கி வைத்து பொது மக்களை சந்தித்து வருகிறார்.

    அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,617 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் ஊராட்சியில் கடந்த 9-ந்தேதி மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடினார்.

    நேற்று காலை திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், சீகம்பட்டி ஊராட்சி சபைக் கூட்டத்திலும், மாலை மணிகண்டன் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி சபைக் கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.

    இன்று 3-வது நாளாக மாலை 4 மணிக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியம், இள்ளலூர் ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அக்கிராம மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    இதில் இள்ளலூர் ஊராட்சி கழக வார்டு செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். #DMK #MKStalin
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார். #DMK #MKStalin #JayalalithaaDeath
    தஞ்சை:

    தஞ்சை மாவட்டம்  மாதாகோட்டை ஊராட்சி சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆட்சி மாற்றம் வரவேண்டும் என நம்மை விட மக்களுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலோ அல்லது உள்ளாட்சி தேர்தலோ வரலாம்.  தமிழகத்தின் அவல நிலைக்கு காரணமான அ.தி.மு.க.-பா.ஜ.க. அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரமிது.

    கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து முறையாக அறிக்கை கொடுத்தது தி.மு.க. 



    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது. அதற்கு யார் காரணம் என்றாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை சிறையில் அடைப்போம்.

    நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால்தான் தமிழகத்திற்கு தேவையானதைப் பெறமுடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது தி.மு.க.வுக்கு தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். #DMK #MKStalin #JayalalithaaDeath
    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் 238 ஊராட்சிகளில் இன்று மாலை ஊராட்சி சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

    சென்னை:

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் 238 ஊராட்சிகளில் இன்று மாலை ஊராட்சி சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்’ என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன்வைத்து மக்களிடம் சென்று இன்றைய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, மக்கள் விரோத மாநில அரசுகளின் மிக மோசமான செயல்பாடுகளை சொல்வதன் மூலமாக பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றிட வேண்டும் என்று நம்முடைய தலைவர் மு.க. ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

    காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல் பட்டு, ஆலந்தூர் பகுதி, சோழிங்கநல்லூர் பகுதி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய 238 ஊராட்சிகளில் ஊராட்சி வாரியாக சபை கூட்டங்கள் இன்று முதல் நடைபெற உள்ளது.

    அந்தந்த ஒன்றியங்களுக்கு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தலைமை கழக பிரதிநிதிகள் இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    அதன்படி ஆதனூர், பிச்சிவாக்கம், மேவலளூர் குப்பம், வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், ஊனமாஞ் சேரி கோட்டூர், செல்லம் பட்டிடை, குணகரம்பாக்கம், எயையூர், தத்தனூர், பேரீஞ்சம்பாக்கம் பகுதிகளில் இன்று கூட்டம் நடைபெறுகிறது.

    10-ந் தேதி கவுல்பஜார், கருநீலம், அஞ்சூர், குண்ண வாக்கம் ஆகிய ஊர்களில் கூட்டம் நடைபெறுகிறது.

    11-ந் தேதி புலிபாக்கம், செட்டிபுண்ணி யம், வீராபுரம் பகுதிகளிலும், அதனை தொடர்ந்து 19-ந் தேதி முதல் அடுத்த மாதம் 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் பல்வேறு ஊராட்சிகளில் கூட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 10-ந் தேதி வரை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டங்களில் தலைமை கழக பிரதிநிதிகளான எஸ்.ஜெகத்ரட்சகன், தா.மோ.அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., காசிமுத்து மாணிக்கம், அசன் முகம்மது ஜின்னா பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தை பொது இடத்தில் ஆடம்பரம் இன்றி ஒலிபெருக்கி மட்டும் உபயோகித்து நடத்த வேண்டும். கூட்டம் தொடங்கும் முன்பு தலைமை கழகம் தரும் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வினியோகிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் கனிமொழி எம்.பி. 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ஊராட்சி சபை கூட்டங்களில் பங்கேற்கிறார். #KanimozhiMP #dmk

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்தோடு மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கையும், ஆட்சியின் அவலங்களையும் மக்களிடம் நேரில் எடுத்துச் சொல்லும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திட வேண்டும் எனவும் அதில் பங்கேற்போர் பட்டியலையும் அறிவித்துள்ளார்.

    அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட 204 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தலைமைக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., ஆஸ்டின், மனுராஜ் சுந்தரம், நாமக்கல் ராஜேஷ், திருப்பூர் சுந்தரம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    அதன் முதற்கட்டமாக வருகிற ஜனவரி 8, 9, 10-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் ஊராட்சிக் கழகங்கள் வாரியாக நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

    சம்பந்தபட்ட ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி கழகச் செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KanimozhiMP #dmk

    திருவாரூரில் வருகிற 3-ந்தேதி ஊராட்சி சபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “மக்களிடம் செல்வோம்- மக்களிடம் சொல்வோம்- மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன் வைத்துத்தான் நம்முடைய செயல்பாடுகள் இனி அமைய வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    24-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்-சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள்- பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ஜனவரி 3-ந்தேதியன்று தொடங்கி பிப்ரவரி 10-ந்தேதி வரையில், 12,617 ஊராட்சிகளிலும் தி.மு.க.வின் சார்பில் “ஊராட்சி சபைக் கூட்டம்” நடைபெறும்.

    வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊராட்சி சபைக் கூட்டங்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திலும், கழக பொருளாளர் துரைமுருகன் ஈரோடு மாவட்டத்திலும், கழக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 2019 ஜனவரி 3-ந்தேதியன்று தொடங்கி வைக்க உள்ளார்கள்.

    மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே தலைமைக் கழகத்தின் சார்பில் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தின் அடிப்படையில் ஊராட்சியின் பெயர், கலந்து கொள்ளும் தலைமைக் கழக பிரதிநிதிகள் விவரம், தேதி, நேரம் அனைத்தும் அடங்கிய அறிவிப்பினை அந்தந்த கழக மாவட்டச் செயலாளர்கள் வெளியிடுவார்கள். அதன்படி அந்தந்த மாவட்டங்களில் “ஊராட்சி சபைக் கூட்டம்” நடைபெறும்.

    பாசிச பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மக்கள் விரோத மாநில அ.தி.மு.க அரசுகளின் அவலத்தையும், நிர்வாக தோல்விகளையும், ஊர் ஊராக-வீதி வீதியாக-வீடு வீடாகச் சொல்லும் பிரசாரப் பயணம் என்பதால், அனைத்து ஊராட்சிகளில் நடைபெறும் “ஊராட்சி சபைக் கூட்டத்திற்கான” தலைமைக் கழக பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

    கழகத் தலைவரால், அறிவிக்கப்பட்டுள்ள ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைமைக் கழக பிரதிநிதிகளுக்கு, கழக நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இப்பிரசாரத்தின் போது தலைமைக் கழகத்தின் சார்பில் தயாரித்து வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து, கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களையும், மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைத்திட வேண்டும்.

    கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள இந்த “ஊராட்சி சபை கூட்டம்” நடைபெற உள்ள அனைத்து விவரங்களையும், தொடர்ந்து தலைமைக் கழகத்திற்கு தெரியப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin
    ×